திறந்தவெளி சிறைச்சாலையாக அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை ஏ9 பாதை திறந்து வைத்தவுடன் இப்போது குட்டி சிங்கப்பூர் ஆகிவிட்டது. வீதியோரக் கடைகளுக்கு பஞ்சமேயில்லை. எவ்வளவு வாகனங்கள்! எத்தனை மக்கள்! எத்தனை கடைகள்! உண்மையில் யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது மிக வியப்பாக இருக்கிறது. நல்லூர்த் திருவிழாவை விட மிக அதிகமான சன நெருக்கடியை யாழ் நகர் புறங்களில் அவதானிக்கமுடிகிறது.
உண்மையிலே எவ்வளவு காலங்கள்? நிறைய பிரச்சனைகள்? நாள்தோறும் ஏதாவது இன்னல்கள். அத்தனையும் முடிவுக்கு வந்து இப்போது கொஞ்சம் பிரச்சனைகள் இல்லாது வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வடக்குக்கும் தெற்குக்கும் இடையான இணைப்புபாலமாக இருந்த ஏ9 பாதையும் திறந்தாச்சு. 24 மணிநேரமும் பயணிக்க கூடிய வகையில் பாதையும் திறந்தாச்சு.
நாள்தோறும் யாழ்ப்பாணத்துக்கு வந்து குவியும் வாகனங்கள், மக்கள், பொருட்கள், என யாழ் நகரமே வியந்து நிற்கிறது. பெரிய நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தில் வந்து தமது முதலீட்டை இடுவது மகிழ்ச்சி தான். அதுபோல தாங்கள் யாழில் வேலையற்று தவிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவீர்களானல் உங்கள் வருகையால் அவர்களின் வாழ்க்கையும் நம்பிக்கை ஒளியூட்டும். அன்புள்ள நிறுவனங்களின் தவைவர்களே இதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.
அதைவிட யாழுக்கு வந்து குவியும் மக்கள் தொகையை கண்டு வியந்து நிற்கிறது யாழ் சமூகம். இன மத பேதமின்றி உங்கள் வருகையை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். வாருங்கள். யாழ் மக்களுடன் பழகிப் பாருங்கள். எவ்வளவோ இன்னல்களையும் அனுபவித்து எவ்வளவு சந்தோசமாக உங்களை வரவேற்பதை பாருங்கள். உபசரித்து மகிழ்வதில் தமிழ் மக்களை தவிர இந்த பாரினுள் எவரும் இல்லை என்று உணர்த்துகிறார்கள். பாருங்கையா! பாருங்க!
இவற்றோடு வந்து குவியும் பொருட்கள். ஐயோ! வீதியோரக் கடைகளின் வருகை அதிகரிப்பால் யாழப்பாண கடை முதலாளிகள் மனம் கலங்கிப்போய் உள்ளனர். அவர்களையும் கொஞ்சம் எட்டி பாருங்க அன்புள்ள எம் உறவுகளே. எமக்கும் விளங்கிறது விலை வித்தியாசங்கள். யார் யாரைத் தான் நோக! என்ன செய்ய? யாழப்பாணத்துக்கு என்று உள்ள சில பொருட்களை கூட நீங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வந்து விற்பது மனதுக்கு மிக வேதனை அளிக்கிறது. அதிலும் நீங்கள் பலாப்பழம் கூட தென்னிலங்கையில் இருந்து கொண்டு வருவது மிக மன வேதனையாக இருக்கிறது. அன்புள்ள வீதியோர வியாபாரிகளே! கொஞ்சம் யாழ்ப்பாண பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்! பாவம் ஐயா! நம்ஊர் வியாபாரிகள்.
அன்புள்ள சுற்றுலா பயணிகளே! யாழ்ப்பாணம் அழகான பிரதேசம். வந்தோரை வாழ வைக்கும் நம்ம ஊர். எனவே அழகான ஊரை அசுத்தப்படுத்தாதீர். ஏ9 பாதை திறந்தவுடன் யாழ்ப்பாணத்தை பார்க்க டெங்கு நுளம்புக்கு கூட ஆசை வந்திட்டு போல. ஏய் டெங்கு நுளம்பே! உன்னால் 17 பேரை உட்கொண்டு விட்டாய். இன்னுமா தீரவில்லை உன் பசி. நிறுத்து. காணும் உன் விளையாட்டு.
உண்மையிலே ஏ9 பாதை திறப்பு யாழ்ப்பாண மக்களை பொறுத்த வரையில் மிக அவசிய தேவை ஒன்றாகும். பாதை திறந்தவுடன் இலகுவாக தென்னிலங்கையுடனான தொடர்பை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அத்தோடு அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்துப் பொருட்களும் பெற்றுக் கொள்ளவதோடும் நியாய விலைகளில் கிடைப்பதும் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. அத்தோடு உங்களோடு சேர்ந்து நானும் யாழ்தேவியை புகையிரதத்தை யாழ்ப்பாணத்துக்கு எதிர்பார்த்தப்படி...........................................
குறிப்பு:
அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எனது பதிவுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் தவறுகளை இயன்றவரை திருத்த முயற்சிக்கிறேன். தொடர்ந்து எனது வலைப்பதிவிற்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு........